வீட்டிலிருந்து பணியாற்றும் முறைமை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் - FLASH NEWS - TAMIL


வீட்டிலிருந்து பணியாற்றும் முறைமை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்



மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால் அத்தியாவசிய சேவைகளை முறையாகப் பேணுவதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட நிறுவனத் தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

 

இதன்போது குறிப்பாக சுகாதாரம், கல்வி, கைத்தொழில், விவசாயம் மற்றும் கடற்றொழில் போன்ற துறைகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்தந்தத் துறைகளில் தற்போதைய எரிபொருள் தேவைகள் குறித்து அமைச்சுக்களின் செயலாளர்களால் ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது.

 

முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த ஜனாதிபதி, சுகாதாரத்துறை போன்றவற்றுக்குத் தேவையான அத்தியாவசிய எரிபொருள் கையிருப்புகளைப் பிரதேச ரீதியாகப் பராமரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயுமாறு கேட்டுக்கொண்டார். 


அதேபோன்று, வீட்டிலிருந்து பணியாற்றும் முறைமை குறித்து மேலும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் செயலாளர்களுக்கு இதன்போது அறிவுறுத்தினார்.

 

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலைமைகள் குறித்து முன்கூட்டியே எதிர்வுகூற முடியாது என்பதால், எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தையும், அதற்காக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் குறியீட்டு முறையை (QR Code) மேலும் முறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

 

தற்போதுள்ள டிஜிட்டல் குறியீட்டு முறையில் காணப்படும் குறைபாடுகளை மிக விரைவில் திருத்தியமைத்து அதனைப் புதுப்பிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். 


மேலும், உருவாகும் புதிய நிலைமைகள் குறித்து தொடர்ச்சியான கண்காணிப்புடனும் அவதானத்துடனும் இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு துறையும் தனித்தனியாக முடிவெடுப்பதற்குப் பதிலாக, ஒட்டுமொத்தமாகச் சிந்தித்து சவால்களுக்கான மாற்று வழிகளைக் கண்டறிந்து செயற்படுத்த வேண்டும் என்றும் இதற்காகப் பரஸ்பர புரிந்துணர்வுடன் விரைவாகச் செயற்படுமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

 

இந்த சந்திப்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் நந்திக்க சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் டிஜிட்டல் பொருளாதார ஆலோசகர் ஹான்ஸ் விஜேசூரிய, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷான் கமகே ஆகியோருடன் சுகாதாரம், கல்வி, கைத்தொழில் மற்றும் கடற்றொழில் அமைச்சுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.