அஸீம் கிலாப்தீன் 


இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், கத்தார் அரசாங்கத்தினால் 80,000 அமெரிக்க டொலர் பெறுமதியான தேடுதல் மற்றும் மீட்பு உபகரணங்கள் இன்று (17) வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கைக்கான கத்தார் தூதுவர் மேதகு ஹமத் பின் முகமது அல்-தோசரி (H.E. Ambassador Hamad bin Mohammed Al-Dosari) அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உபகரணங்களை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திடம் (DMC) உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

கத்தார் அபிவிருத்தி நிதியத்தின் (QFFD) நிதிப் பங்களிப்பில், கொழும்பிலுள்ள கத்தார் அறக்கட்டளை (Qatar Charity) அலுவலகத்தின் ஊடாக இந்த உதவித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இயற்கை அனர்த்தங்களின் போது மேற்கொள்ளப்படும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை (Search and Rescue Operations) துரிதப்படுத்தவும், நவீன தொழில்நுட்பக் கருவிகள் மூலம் உயிரிழப்புக்களைத் தவிர்க்கவும் இந்த உபகரணங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

இலங்கைக்கும் கத்தார் நாட்டிற்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் ஒரு முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. கத்தார் அறக்கட்டளையின் பிரதிநிதிகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த நவீன உபகரணங்கள் மூலம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் அனர்த்தங்களின் போது அரசாங்கம் முன்னெடுக்கும் மீட்புப் பணிகள் இனிவரும் காலங்களில் மேலும் வினைத்திறனாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.