GMOA ஏன் வேலைநிறுத்தப்போராட்டத்தில் இறங்கியது?
வைத்தியர்களின் நிருவாக விடயங்கள் தாபன விதி கோவைகளை மீறும் வகையில் நடைபெற்று வருவதனால் அதற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கைக்கு வைத்தியர்கள் தள்ளப்பட்டார்கள்.
1. ஒரு வகையான ஊழியர்களின் 15% வீதத்திற்கு மேல் ஒரு தொழிற்சங்கத்தில் இருப்பார்களாயின் அந்த தொழிற்சங்க பிரதிநிதி இடமாற்ற சபைக்கு நியமிக்கப்பட வேண்டும் என தாபன விதிக்கோவை கூறுகிறது. இலங்கை வைத்தியர்களை பொறுத்தவரையில் அவர்களின் 95% ஆன வைத்தியர்களை GMOA தன்னகத்தே உள்ளடக்கியுள்ளது.
2. உள்ளகப் பயிற்சியை முடித்த வைத்தியர்கள் உள்ளகப் பயிற்சி முடித்த அடுத்த நாளிலிருந்து சுகாதார அமைச்சுக்கு நியமிக்கப்படுவார்கள். அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களுக்கு சுகாதார அமைச்சு தேவைக்கேற்ப அவர்களை இடங்களுக்கு பிரித்து வழங்கும். இவ்வாறு வழங்கும் பொழுதும் அவர்கள் ஏற்கனவே உள்ள வருடாந்த இடமாற்றம், விஷேட இடமாற்றங்கள் மற்றும் கஷ்டப் பிரதேச இடம் மாற்றங்கள் போன்ற இடமாற்றங்களுக்கு பிரதியீடாக அனுப்பப்படுவார்கள். இந்த நிலையில் இந்தப்பட்டியலை தயாரிக்கும் பொறுப்பு இடம் மாற்ற சபைக்கு தாபன விதிக்கோவையின் படி வழங்கப்படுகிறது. ஆனால் அதனை மறைக்கும் முகமாகவும் சாதாரண மக்களை பிழையாக தூண்டும் விதமாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
3. ஆசிரியர்களுக்கும் ஏனைய ஊழியர்களுக்கும் உள்ளது போன்று, கஷ்டப் பிரதேச நிலையங்கள் வைத்தியர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதற்காக ஏழு அடிப்படை விடயங்கள் பட்டியலிடப்பட்டு அவற்றிற்கு புள்ளிகள் வழங்கப்படுகின்றன. இவை அனைத்தும் இடமாற்ற சபையின் ஊடாக செய்யப்படல் வேண்டுமென தாபன விதி கோவை குறிப்பிடுகிறது. ஆனால் ஒரு சிலரின் தனிப்பட்ட நோக்கங்களுக்காக 120க்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்கள் இந்த முறை தன்னிச்சையாக கஷ்டப்பிரதேச பட்டியலில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. இது முழுப்பட்டியலின் 1/3 பங்கு ஆகும். இவ்வாறான செயல்முறையின் போது அந்த கஷ்டப் பிரதேச இடங்களுக்கு வைத்தியர்கள் நியமிக்கப்படாமல் நோயாளிகள் பாதிக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. முக்கியமாக ஏற்கனவே பட்டியலில் இருந்த வைத்தியசாலைகளும் சுகாதார நிறுவனங்களும் எந்த விதமான உட்கட்டமைப்பு வசதிகளும் ஏனைய வசதிகளும் மேம்படுத்தி கொடுக்கப்படாமல் இவ்வாறான பட்டியல்களில் இருந்து விடுவிக்கப்படுவதன் நோக்கம் என்ன? இவை வைத்தியர்களுக்கு வழங்கப்படும் நிதிக்கு அப்பாற்பட்ட சலுகைகள். இவற்றில் அமைச்சு கை வைக்கும் நோக்கம் என்ன?
4. கஷ்டப் பிரதேச நிலையங்களில் வேலை செய்பவர்களுக்கு ஒரு வருடத்தின் பின்னர் வழங்கப்படுகின்ற இடம் மாற்றங்கள் இந்த முறை இரண்டு வருடங்கள் என இடமாற்ற சபையிடம் இருந்து எந்த விதமான ஆலோசனைகளும் பெறப்படாமல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அரச சேவையில் உள்ள வைத்தியர் ஒருவர் இரண்டு வருடங்களின் பின்னர் இடமாற்றத்தை கோர முடியும். இவ்வாறு இருக்க கஷ்டப் பிரதேச வைத்தியசாலைகளில் வேலை செய்யும் வைத்தியர்களுக்காக வழங்கப்பட்ட இந்த சலுகை இடைநிறுத்தப்படும் பொழுது அந்த வைத்தியசாலைகளில் வேலை செய்ய வைத்தியர்கள் விரும்ப மாட்டார்கள். இதனால் பாதிக்கப்பட போவது நோயாளிகளே!!!
இந்த விடயங்களை கருத்தில் கொள்ளாமல் அரசியல் நோக்கங்களுக்காக மாத்திரமே ஒரு பட்டியலை தயாரித்துக் கொண்டும் அதனை நியாயப்படுத்திக் கொண்டும் அதனை ஜனநாயக ரீதியாக எதிர்க்கும் பொழுது, அராஜகமாக நடந்து கொள்ளும் இந்த முறைமை சரியானதா?
ஒரு பகுதியினருக்கு வைத்தியர்கள் மீதுள்ள ஒரு தொழில் காழ்ப்புணர்வை மூலதனமாக பயன்படுத்துவதற்கும் அதனை வைத்து அரசியல் செய்வதற்கும் சிலர் முன்னிற்பது தெட்டத் தெளிவாக விளங்குகிறது.
System change என்பது System சிறப்பானதாக மாற வேண்டும். மாற்றமாக நடைமுறையில் உள்ள நல்ல விடயங்களை கெடுத்து விடக் கூடாது.
குறிப்பு: கஷ்டப் பிரதேச சுகாதார நிலையங்களை புள்ளியிடல் நடைமுறையை கொண்டு வருவதற்கு GMOA இன் பங்களிப்பு இடமாற்ற சபையில் மிகவும் காத்திரமாக வழங்கப்பட்டது. அரசியல் ரீதியான நோக்கங்களுக்காக நல்ல விடயங்களை நாசமாக்க வேண்டாம்.
மேலும் நியாயமான விடயங்களை கலந்துரையாடலில் தீர்ப்பதை விட்டு விட்டு, அனைத்துக்கும் அரசியல் சாயம் பூச முன்வருவதிலிருந்து அவர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.
வைத்தியர்கள் அடிமைகள் அல்ல.

Post a Comment