முஸ்லிம் பெண் சமூகத்தில் "மங்கிப்போன எழுச்சியின் மேல் பாய்ந்த காலை வெளிச்சம்"
உலக மக்கள் மத்தியில் வாழும் பெண் வர்க்கத்தின் அடைக்கப்பட்டுள்ள கருத்தியல், உரிமைகள், மீண்டெழும் சக்தி, பெண்களின் எதிர்காலம் தொடர்பாக கொழும்பு பி.டி. சிறிசேன விளையாட்டரங்களில் கடந்த 08-03-2026 அன்று சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்திற்காக தேசிய மக்கள் சக்தி சார்பாக நாட்டின் நாலா புறங்களிலிருந்தும் ஒன்று திரண்ட வரலாறு காணாத பெண்கள் கூட்டமானது தேசியத்திற்கும் உலகிற்கும் பெரும் செய்தியினை சொல்லியிருக்கின்றது என்பது பலருடைய கருத்தாக உள்ளது.
எமது நாடானது இனவாதம், மதவாதம், பிரிவினை வாதம் என்ற மூன்று அரசியல் கலாச்சாரத்திற்குள் அகப்பட்டு தத்தளித்து கொண்டிருந்த ஒரு தேசமாகவே பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்த நாட்டில் வாழுகின்ற பெண்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதென்பது எட்டாக்கணியாகவே பார்க்கப்பட்டது. அதிலும் இளம் முஸ்லிம் பெண் சமூதாயம் முன்னோக்கி செல்லும் கொள்கை அரசியலுக்குள் வருவதென்பதும், அவர்களுடைய கலாச்சாரத்திலிருந்து நாட்டின் அரசியல் கலாச்சாரம் வரைக்கும் தடைகளை ஏற்படுத்தும் விடயமாகவே பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில்தான் தேசிய மக்கள் சக்தி அரசு நாட்டினை பொறுப்பெடுத்து வழி நடாத்தி செல்லும் நிகழ் காலத்தில் தனது இரண்டாவது சர்வதேச மகளிர் தின கொண்டாட்ட நிகழ்வு இடம் பெற்றது. மாநாட்டில் தேசிய மக்கள் சக்தி சார்பாக முக்கிய புள்ளிகள் உரையாற்றிருந்த நிலையில் பதுளை மாவட்ட ஹாலியல பிரதேச சபை உறுப்பினரும், பல்கலை கழக முஸ்லிம் மாணவியுமான ஷேக்கா சம்சுதீனுடைய உரையானது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்த விடயமாக பார்க்கப்பட்டதில் சந்தேகமிருக்க வாய்ப்பில்லை.
அதிலும் முக்கியமாக இந்த நாட்டில் வாழுகின்ற முஸ்லிம் பெண்களின் அரசியல் அபிலாசைகள், அவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற உரிமைகள், மறுக்கப்படுகின்ற உரிமைகள், அவர்களுடைய எதிர்காலம் என்பன போன்ற பல முக்கிய விடயங்களுக்கு ஷேக்கா சம்சுதீனின் உரையும் அவருக்கு குறித்த மாநாட்டு மேடையிலே உரையாற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தியினால் வழங்கப்பட்ட சந்தர்பப்பமானது முஸ்லிம் பெண்களும் அவர்கள் சார்ந்த இளம் சமூதாயத்தினரும் "மங்கிப்போன எழுச்சியின் மேல் பாய்ந்த காலை வெளிச்சம்" என்ற சிந்தனைக்குள் தள்ளப்பட்டுள்ள புதுமையாகவே பார்க்க வேண்டியுள்ளது.
பல முக்கிய கருத்துக்களை வெளிப்படுத்திய அந்த மேடையில் பெண்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சனைகளில் சாதி, மதம், மொழி போன்ற பிரச்சனைகளுக்குள் இருக்கும் எண்ணிலடங்காத பிரச்சனைகளில் இருந்து பெண்கள் வெளியில் வருவதென்றால் அவர்கள் சக்திமிக்கவர்களாக மாற வேண்டும். அப்பொழுதான் நாடு முன்னேற்றகரமான சக்திமிக்க நாடாக மாறும், பெண்கள் ஒரு பொழுதும் தாங்கள் முன்வைக்கும் காலை பின் வைக்கின்ற சமூகம் கிடையது, வரலாறு நெடுகிலும் அவர்கள் சவால்களையே சந்தித்து வருகின்றார்கள்.
பெண்கள் குடும்பத்தினையும் சமூகத்தினையும் சுமப்பவர்களாக இருக்கின்றார்கள். தேசிய மக்கள் சக்தி தந்துள்ள தைரியத்தினால்தான் இவ்வாறானதொரு மிக பிரமாண்டமான மேடையில் இளம் முஸ்லிம் பெண்ணாக இருந்தும் நான் பயமின்றி உரையாற்றுகின்றேன். தேசிய மக்கள் சக்தி என்பது மக்களுடைய உரிமைகளுக்கான கருத்து சுதந்திரம் மற்றும் அவர்களுடைய சக்தியுமாகும். தன்னை ஒரு பெண் அரசியல் வாதியாகவும் பிரதேச சபை உறுப்பினராகவும் கட்சியே செதுக்கியுள்ளது.
இந்த நாட்டில் நேர்மையான மனிதராக வாழ்வதற்கு சமூகத்திற்கு எதற்கும் பயப்பட தேவையில்லை, எவருக்கும் பயந்து ஒழிந்திருக்கவும் தேவையில்லை. தைரியமாக சமூகத்திதிற்கு முன்னால் வந்து தமது நேரான பாதையில் நாம் பயணிக்க முன்வர வேண்டும், மக்களுக்காக வேலை செய்ய வேண்டும், மக்களுக்கு சரி பிழைகளை தெளிவுபடுத்த வேண்டும். அவளும் பெண் என்ற வகையில் எனது தாய் என்னை முழுமையான தைரியத்துடன் வளர்த்துள்ளார்.
அதே போலவே தேசிய மக்கள் சக்தியை பிரதி நிதித்துவப்படுத்தும் அனைத்து பெண்களும் பின்னால் நின்று செயற்படாமல் முன்னால் வந்து செயற்படவும் ,பயனிக்கவும் முன் வாருங்கள். கிராமத்து பெண்கள், நகர பெண்கள்,படித்தவர்கள்,படிக்காதவர்கள், சிங்கள,முஸ்லிம், தமிழ் என்ற வேறுபாடுகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் எல்லோரும் சகஜமாக ஒரே இடத்தில் உட்கார்ந்து ஒற்றுமையாக பயனிப்போம். அப்படி பயனிப்போமாக இருந்தால் எங்களுடைய குரலானது மிகப்பெரும் ஒருமித்த குரலாகவும், பெண்களுக்கான வெற்றியின் குரலாகவும் அமையும்.
நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் பரம்பரையானது அடிக்கி ஒடுக்கப்பட்ட பரம்பரை கிடையாது, பழைய கலாச்சாரத்திற்குள் முடங்கிக்கிடக்கின்ற பரம்பரையுமில்லை, மெளனித்திருக்கும் பரம்பரையுமில்லை, தலை நிமிர்ந்து எழுந்து நின்று போராடும் பரம்பரையாகும்.
எங்களுக்கு தேவை பெண் அடிமைத்தனத்திற்கு விடுதலை கொடுக்கின்ற பரம்பரையாக பயனிப்பது, மக்களுடைய உரிமைகளை வென்றெடுக்க கூடிய நாட்டில் வாழும் சமூகமாக மாறிக்கொள்வது, பெண்களுக்கு கெளரவத்தினை கொடுக்கின்ற சமூகத்தினை உருவாக்குவது, எங்களுடைய சிந்தனைகள் எல்லாம் வெளிச்சமுள்ள எதிர்காலத்தினை ஏற்படுதிக்கொடுக்கும் நாட்டினையும், சமூகத்தினையும் சந்ததியினருக்கு உருவாக்குவதே. அவ்வாறான நாட்டினையே தேசிய மக்கள் சக்தி அரசானது எங்களுக்கு தருவதற்கு முயற்சிக்கின்றது, அது வெகு தொலைவில் இல்லை.
நாங்கள் பிரிவினையினை கையிலெடுக்க விடமாட்டோம், பழிவாங்கும் அரசியல் கலாச்சாரத்துக்கு இனியும் இடமளியோம், நாம் உருவாக்குவது ஒரே குடையின் ஒற்றுமையுடன் சகலரும் பயனிக்கும் நாட்டிலே சகல பெண்களுக்கும் சம உரிமை கிடைக்க கூடிய நாட்டினையாகும்.
இலங்கையில் வாழுகின்ற இளஞர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றது. நாங்கள் எழுந்து நிற்கின்ற பொழுது எங்கள் குடும்பம் எழுந்து நிற்கும், குடும்பம் எழுந்து நிற்கின்ற பொழுது சமூகம் எழுந்து நிற்கும், சமூகம் எழுந்து நிற்கின்ற பொழுது நாடு எழுந்து நிற்கும் என நாங்கள் இன்று கூடியிருக்கின்ற சர்வதேச மகளிர் தினத்தில் ஞாபகப்படுத்திக்கொள்வோம்.
சிங்கள தமிழ்,முஸ்லிம் மலே, ,பேக்கர் பெண்கள் என பிரிந்து நின்று செயற்படாமல் வேறுபாடுகளை மறந்து ஒன்றாக செயற்படுவோமானால் எங்கள் நாட்டினை எவ்வறாலும் ஒன்றும் செய்திட முடியாது, என்ற ஆழமான கருத்தினை திரண்டிருந்த பெண்கள் வெள்ளத்திற்கு முன்னால் தெரிவித்தமை சர்வதேச மகளிர் தின மாநாட்டில் ஒரு இளம் பெண்ணினால் நிகழ்த்தப்பட்ட உரை என்பதற்கும் அப்பால் பல தடைகளுக்கு மத்தியில் எழுதப்படாத முஸ்லிம் அரசியல் கலாச்சாரங்களினால் புதைக்கப்பட்ட அரசியல் அபிலாசைகளுடன் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் பெண்கள் சமூகத்திற்கு பகிரங்கமாக சொல்லப்பட்ட செய்தியாகவே உள்ளது.
உலக அரசியலில் முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு மற்றும் சவால்கள், தலைமைத்துவம் மற்றும் பங்களிப்பு பாகிஸ்தான், வங்கதேசம், இந்தோனேசியா போன்ற நாடுகளில் உயர்மட்ட பெண்களின் பங்களிப்பு கல்வியறிவு மற்றும் விழிப்புணர்வு அதிகரிப்பானது அவர்களுடைய அரசியல் பங்களிப்பானது வேகமாக வளர்ந்து வருகிறமைக்கு காரணமாகவுள்ளது. பெனாசிீர் பூட்டோ பேகம் காலிதா ஷியா, ஷேக் ஹசீனா போன்ற தலைமைகள் அதற்கு உதாரணமாக இருந்தாலும் மருத்துவம், பொறியியல் ,விஞ்ஞானம் மற்றும் இன்னபிற உலக கல்வியில் முஸ்லிம் பெண்களின் சாதனையோடு ஒப்பிடுகின்ற பொழுது அரசியலில் இன்னும் சாதிப்பதற்கு அதிகமே உள்ளது.
அந்த வகையில், நாடாளுமன்றங்களில் இட ஒதுக்கீடு மற்றும் பாலின சமத்துவ கொள்கைகள் மூலம் முஸ்லிம் பெண்கள் கொள்கை வகுப்பிலும், தலைமைத்துவத்திலும் தடம் பதித்து வருகின்ற இக்காலகட்டத்தில் சவால்கள் இருந்தாலும், அவர்கள் ஜனநாயக செயல்பாடுகளில் தீவிரமாகப் பங்கேற்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசானது இலங்கையில் கடந்த கால அரசாங்கங்களை விடவும் அதிகப்படியான உரிமைகளையும், வாய்ப்புக்களையும் வழங்கியுள்ளது என்றே கூறலாம்.
உள்ளூர் முதல் தேசிய மட்டம் வரை பெண் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வீட்டுக்குள் இருந்த முஸ்லிம் பெண்கள் பயப்படாமல் பெண் உரிமைகள் பற்றி பேச தொடங்கியுள்ளார்கள். சட்டத்துறையில் முன்னுக்கு வந்து பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நியாயம் வேண்டி அதில் வெற்றி கானும் சமூகமாக மாறி வருகின்றார்கள். சரோஜா போல்ராஜ் போன்ற பெண் விடுதலைக்காக கருத்தியல் ரீதியாக போராடுபவர்கள் தேசிய மக்கள் சக்தி அரசில் முக்கிய பதவியில் இருப்பதும் பெண் சமூகத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரும் வரப்பிரசாரமாகவே உள்ளது.
அரசியலில் முஸ்லிம் பெண்கள் உண்மையான கொள்கை கட்சிகளுடன் தங்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக பயனிக்க சரியான அடித்தளங்களை அரசு அமைத்துக் கொடுக்கும் விடயத்தில் தெளிவான பாதையில் செயற்பட தொடங்கியுள்ளார்கள். அதற்கு சரியான உதாரணமாக ஹாலியல பிரதேச சபைக்கு தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்டு தெரிவாகியுள்ள பல்கலை கழக மாணவி ஷேக்கா ஷம்சுதீனை எடுத்துக் கொள்ளலாம்.
கல்வி மற்றும் உரிமை என்ற அடிப்படையில் கல்வியறிவு, சமூக விழிப்புணர்வு மற்றும் ஜனநாயக உரிமை குறித்த புரிதல் பெண்கள் அரசியலில் நுழைய முக்கிய காரணிகளாக உள்ளன. சூடான் போன்ற நாடுகளில் 25% இட ஒதுக்கீடு மூலம் நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்கேற்பு உயர்ந்துள்ளது.
இவ்வாறான ஒரு நிலையை இலங்கையிலும் ஏற்படுத்தி பெண்கள் சகல துறைகளிலும் தாமாக இயங்க வேண்டும் என்பதற்காக அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசியலிலும் பெண்களுக்கான சரியான ஒதுகீடு வழங்கப்பட்டு நாட்டினை கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் அவர்களுடைய பங்களிப்பானது உறுதி செய்ப்பட்டுள்ள விடயமாக பார்க்கப்படுகின்றது. இது தூய்மையான கொள்கை முடிவுகளிலும், வென்றெடுக்க வேண்டிய உரிமைகளிலும் அதிகம் செல்வாக்கு செலுத்த உதவுகின்றது.
இஸ்லாமிய சட்ட அமைப்பிற்குள் நின்று, குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டிற்காக பெண்கள் அரசியலில் பங்கேற்பது, மத்திய கிழக்கு மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற விடயமாக சர்வதேச அரங்கில் இருந்தாலும், இலங்கையை பொறுத்த வரையில் வடகிழக்கில் வாழுகின்ற முஸ்லிம் பெண்களும் அவர்கள் சார்ந்த இளஞ் சமூதாயமும் அரசியலில் முன்னுக்கு வருவதற்கு பல காரணிகள் திரை மறைவில் தடுக்கின்றது என்பதில் உண்மைகள் இல்லாமலும் இல்லை.
அரசியலில் இளம் முஸ்லிம் சமூகம் கால்லெடுத்து வைப்பதற்கு ஹிஜாப் தொடர்பான கட்டுப்பாடுகள், தனிப்பட்ட சட்ட விவாதங்கள், மற்றும் பழமைவாத கருத்துக்கள், முஸ்லிம் பெண்களின் மறுக்கப்படும் அரசியல் உரிமைகள், பழகிப்போனை முஸ்லிம் அரசியல் கலாச்சாரங்கள், இன்னும் சமூகத்தில் தாக்கம் செலுத்துகின்ற ஆணாதிக்கம், காதி நீதிமன்றங்களில் பெண் காதி நீதிபதிகளின்மை, தென் கிழக்காசியாவில் செயற்பாட்டில் உள்ள சாக்கடை அரசியல் போன்ற காரணிகள் முஸ்லிம் பெண்கள் பங்கேற்பிற்கு பெரும் தடையாக இருக்கின்றன.
இந்திய அரசியலில், கொள்கை முடிவுகளை எடுக்கும் இடங்களிலும், தேர்தல் களத்திலும் முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து விவாதத்திற்கு உரியதாகவும், அதிகரித்து வரும் ஒன்றாகவும் உள்ளது. அதன் தாக்கம் இலங்கையிலும் இருக்கின்ற அதே இடத்தில் சினிமா மற்றும் சமூக ஊடகங்கில் வெளியாகும் தகவல்களுக்கு அமைவாக இலங்கையில் உள்ள முஸ்லிம் பெண்கள் தாங்கள் அரசியலுக்கு வரும் முடிவினை எடுப்பதில் தயக்கம் செலுத்துகின்றார்கள்.
ஆனால், மக்கள் விடுதலை முன்னணியின் வழிகாட்டலின் கீழ் புதிய அரசினை கையிலெடுத்திருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசும் நாட்டின் தலைமையான அநுர திஸாநாயக்காவும் இலங்கை அரசியலில் 25% க்கும் அதிகமான பெண்களின் ஆதிக்கம் இருக்கவேண்டும் என்பதில் கொள்கை ரீதியாக வெற்றி கண்டுள்ளார்கள் என்றே கூற வேண்டும்.
பிரதமர் ஹரிணி தொடாக்கம் அமைச்சர் சரோஜா போல்ராஜ், கொட்டாச்சி, ஹேமமாலி போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகையோடு பெண்கள் சகல துறைகளிலும் சாதிப்பதற்கு அவர்களுடைய மறு மலர்ச்சியும் அவர்களை கட்டுப்படுத்துகின்ற சமூக காரணிகளை உடைத்தெறிவதற்கு மக்கள் விடுதலை முன்னணி வகுத்துள்ள நாட்டுக்கு தேவையாக உள்ள அரசியல் வியூகமும் புதிய வெளிச்சத்துடன் முஸ்லிம் பெண்கள் சமூகத்திலிருந்து அரசியல் செய்வதற்கான புதிய கலாச்சாரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதானது தெளிவான விடயம் என்பது நடுநிலை சிந்தனையாளர்களின் கருத்தாக உள்ளது.
அந்த வகையில் மக்கள் விடுதலை முன்னணியானது முஸ்லிம் பெண்களின் அரசியல் வாய்ப்பினையும் அதனோடு சேர்ந்த உரிமைகளையும் இந்த நாட்டில் சமமாக கொடுப்பதற்காக போட்ட அத்திவாரமே கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர் அன்ஜான் உம்மா என்ற முஸ்லிம் பெண்மணிக்கு பாராளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பினை கொடுத்ததாகும்.
அது இன்று பதுளை ஹாலியலயைச் சேர்ந்த ஷேக்கா சம்சுதீன் என்ற முஸ்லிம் பல்கலை கழக மாணவி உலக மகளிர் மாநாட்டில் பெண்கள் உரிமைகள் சம்பந்தமாகவும், வென்றெடுக்க வேண்டிய அரசியல் காரணிகள் சம்பந்தமாகவும் தேசியத்திற்கும் உலகிற்கும் எடுத்துச்சொல்லும் வாய்ப்பினை கொடுத்துள்ளது.
ஆகவே, இலங்கை அரசியலில் இளம் முஸ்லிம் பெண் சமூகம் கால் வைப்பதற்கும், தமக்கு சரியாக படுகின்ற அரசியல் கொள்கையினை தேர்ந்தெடுப்பதற்கும் ஹிஜாப் தொடர்பான கட்டுப்பாடுகள், தனிப்பட்ட சட்ட விவாதங்கள், மற்றும் பழமைவாத கருத்துக்கள், முஸ்லிம் பெண்களின் மறுக்கப்படும் அரசியல் உரிமைகள், பழகிப்போனை முஸ்லிம் அரசியல் கலாச்சாரங்கள் போன்றவைகளை தடைகளாக நினைத்து அல்லது அதற்கு பயந்தவர்களாக இன்னும் நான்கு சுவர்களுக்குள் ஒழிந்திருக்காமல் ஹாலியல ஷேக்கா சம்சுதீனை போன்று "மங்கிப்போன எழுச்சியின் மேல் பாய்ந்த காலை வெளிச்சமாக" வெளி உலகிற்கு வந்த சமூகமாக போராட வேண்டும்.
அதற்காக நாட்டின் தலைமையும் தேசிய மக்கள் சக்தி எனும் பேரியக்கமும் தூய அரசியல் கொள்கையுடனான சமத்துவ அரசியல் பாதையை எமக்கு காட்டி தந்துள்ளது.
தோழர் ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

Post a Comment