"இலங்கையில் 6 பேரில் ஒருவர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களை நாம் மீட்டெடுக்க வேண்டும். வறுமையான மக்களைக் கொண்ட நாடாகத் தொடர்ந்து இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது" என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (12) நடைபெற்ற 'பிரஜா சக்தி' தலைவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"கடந்த காலங்களில் வறுமை ஒழிப்பு என்ற பெயரில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், அவை தோல்வியடைந்த திட்டங்களாகவே அமைந்தன. அரசியல் நோக்கங்களுக்காக அந்தத் திட்டங்களைப் பயன்படுத்தியதே இதற்குக் காரணம்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, கிராமிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, கிராம மட்ட அபிவிருத்தியை உறுதி செய்யும் நோக்கில் 'பிரஜா சக்தி' வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கிராமிய ரீதியில் வறுமையை ஒழித்து, சுபீட்சமான நாட்டை உருவாக்கும் நோக்கிலேயே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது" என்றார்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் தலைமையில் மாவட்டத்தில் பிரஜா சக்தி குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 48 கிராம சேவகர் பிரிவுகளுக்குமான பிரஜா சக்தி தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்தினத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், "கிராமிய மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதன் மூலமே நாட்டின் அபிவிருத்தியைத் தன்னிறைவாகக் காண முடியும் என்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சிந்தனைக்கு அமைவாகவே இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கிராமமும் அடிப்படை அபிவிருத்தியைக் காணவுள்ளது. தலைவர்களாக நியமனம் பெறுபவர்கள் ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாகப் பொறுப்புடன் தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும்" எனவும் கேட்டுக்கொண்டார்.
- கிருஷ்ணகுமார்-

0 Comments :
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK