இலங்கை விமானப் படையின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பு கொட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்திற்கு புதிய தகவல் தொழில்நுட்ப மத்திய நிலையம்
இலங்கை விமானப் படையின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ், விமானப் படை தகவல் தொழில்நுட்பப் பிரிவினால் மட்டக்களப்பு கொட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட நவீன வசதிகளுடனான புதிய தகவல் தொழில்நுட்ப (IT) மத்திய நிலையம் 2026 பெப்ரவரி 23ஆம் திகதி மாணவர் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது.
மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பக் கற்றல் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், குளிரூட்டப்பட்ட புதிய கணினி ஆய்வுகூடம் அமைக்கப்பட்டுள்ளதுடன், இதில் 15 டெஸ்க்டொப் (Desktop) கணினிகள், UPS கட்டமைப்பு மற்றும் இணைய வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாணவர்கள் நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி தமது கல்வியைத் தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை விமானப் படையின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இவ்வாறான செயற்திட்டங்களை நாடு முழுவதிலுமுள்ள தெரிவுசெய்யப்பட்ட கிராமப்புற பாடசாலைகளில் முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்குத் தேவையான கணினி மேசைகள் மற்றும் நாற்காலிகள் மட்டக்களப்பு ரோட்டரி கழகத்தினால் (Rotary Club) வழங்கப்பட்டன. குறித்த நிலையத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில், விமானப் படையின் மின்னியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பொறியியல் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் அசித ஹெட்டியாரச்சி, தகவல் தொழில்நுட்பப் பணிப்பாளர் குரூப் கப்டன் சானக சூரியஆராச்சி உள்ளிட்ட விமானப் படை அதிகாரிகள், ரோட்டரி கழக உறுப்பினர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
Post a Comment