குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணரான ஷாபி சிஹாப்தீனின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சட்ட மா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
பௌத்த மத பெண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படும் வகையிலான சத்திரசிகிச்சை செய்வதாக, வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதோடு, அவருக்கு எதிராக சட்ட விரோதமாக சொத்து சேர்த்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு கட்டாய விமுறையில் அனுப்பப்பட்டு பின்னர் அவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார்.

ஆயினும்,குறித்த விடயங்கள் தொடர்பில் மேற்கொண்ட வழக்கு விசாரணைகளில் குறித்த குற்றச்சாட்டுகள் எவ்வித அடிப்படையுமற்றவை என நீதிமன்றம் அறிவித்ததோடு, அவர் நிரபராதி என அறிவித்து விடுதலை செய்திருந்தது. 
அதற்கமைய, அவர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட வேளையிலும் பணி இடைநிறுத்தத்தில் இருந்த காலப்பகுதியிலும் அவருக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்ட மாஅதிபர் தற்போது நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார்.